எல்.ஐ.சி. முகவர்கள் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்
காப்பீட்டு வார விழாவையொட்டி எல்.ஐ.சி. முகவர்கள் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் இன்சூரன்ஸ் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக எல்.ஐ.சி. முகவர்கள் பங்கேற்ற இன்சூரன்ஸ் விழிப்புணர்வு மற்றும் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் பெரம்பலூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆயுள் காப்பீட்டு கழக பெரம்பலூர் கிளை முதுநிலை மேலாளர் சங்கர் தலைமை தாங்கினார். எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு தொடங்கிய மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுமதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் எல்.ஐ.சி. முகவர் சங்க தலைவர் சுத்தாங்காத்து, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் கருப்பையா, கோட்ட இணை செயலாளர் முருகானந்தம் உள்பட திரளான முகவர்கள் கலந்து கொண்டனர். மோட்டார் சைக்கிள் ஊர்வலம் வெங்கடேசபுரத்தில் இருந்து புறப்பட்டு சங்குப்பேட்டை, கடைவீதி, பழைய பஸ் நிலையம், காமராஜர் வளைவு, மதனகோபாலபுரம், பாலக்கரை, புதிய பஸ் நிலையம் சென்று மீண்டும் எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தில் நிறைவடைந்தது.