சென்னையின் அடையாளமாக திகழும் எல்.ஐ.சி. கட்டிடத்தில் திடீர் தீ விபத்து
சென்னையின் அடையாளமாக திகழும் எல்.ஐ.சி. கட்டிட விளம்பர பெயர் பலகையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை,
சென்னையின் அடையாளமாக திகழ்வது எல்.ஐ.சி. கட்டிடம். திரைப்படங்களில் சென்னையை காண்பிப்பது என்றாலே அதில் எல்.ஐ.சி.யையும் காண்பிக்கும் காலமும் இருந்தது.
சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது.
பல பெருமைகளை கொண்ட இந்த 14 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் 15 அடி உயரம் மற்றும் 40 அடி அகலம் கொண்ட எல்.ஐ.சி. என்ற விளம்பர பெயர் பலகை அமைக்கப்பட்டு இருந்தது.
இது தொலைவில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது.
பயங்கர தீவிபத்து
இந்த நிலையில் நேற்று மாலை 5.50 மணி அளவில் இந்த பெயர் பலகையில் இருந்து திடீரென புகை கிளம்பி உள்ளது.
அப்போது, கோடம்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன டிரைவர் பாலாஜி (வயது 30) என்பவர் அந்த வழியாக சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மேற்கொள்ளும் பயிற்சி ஆட்டத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார். எல்.ஐ.சி. பெயர் பலகையில் இருந்து புகை கிளம்பியதை பார்த்த அவர் உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதற்குள் பயங்கரமாக தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் வாகனங்களை நிறுத்தியவாறு கட்டிடத்தை பார்த்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீயணைப்பு வாகனங்கள் வந்தன
தகவல் அறிந்ததும் சென்னை திருவல்லிக்கேணி, எழும்பூர், தேனாம்பேட்டை, அசோக் நகர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் அண்ணா சாலை எல்.ஐ.சி. கட்டிடத்தை நோக்கி விரைந்தன.
மேலும் எழும்பூர் மற்றும் அசோக் நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து உயரமாக உள்ள இடங்களில் ஏற்படும் தீயை அணைக்க உதவும் ராட்சத 'ஸ்கை லிப்ட்' வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.
14 நிமிடங்களில் கட்டுப்படுத்தினர்
இதில் முதலில் வந்த எழும்பூர் தீயணைப்பு நிலைய 'ஸ்கை லிப்ட்' வாகனத்தின் ஆப்பரேட்டர் விஜயகுமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 14 நிமிடங்களில் தீயை முற்றிலுமாக அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பராமரிப்பு பணியாளர்கள் மட்டுமே எல்.ஐ.சி. அலுவலகத்தில் இருந்துள்ளனர். மேலும், கட்டிடத்தின் உச்சியில் ஏற்பட்ட தீ விபத்து அலுவலக தளத்திற்குள் பரவுவதற்கு முன்பே தீ அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.
எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் சென்னை அண்ணா சாலை பகுதி பரபரப்பாக காணப்பட்டது. தீ அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சிறிது நேரத்தில் தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குனர் விஜய சேகர், எல்.ஐ.சி. மண்டல மேலாளர் பாபுராவ், திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் சேகர் தேஷ்முக் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அசம்பாவிதங்கள் தவிர்ப்பு
அதைத் தொடர்ந்து தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குனர் விஜய சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எல்.ஐ.சி. கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்த பெயர் பலகையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 'ஸ்கை லிப்ட்' வாகனங்கள் உள்பட 6 தீயணைப்பு வாகனங்களில் 60 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 14 நிமிடங்களில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.
கோடை காலத்தில் இதுபோன்ற தீ விபத்துகள் அதிகம் ஏற்படுவது வழக்கம். எவ்வித தீ விபத்துகள் நடந்தாலும் நாங்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்கான உபகரணங்கள் உள்ளன. 14 அடுக்குமாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் உள்ள விளம்பர பலகையின் பேனல் போர்டில்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.