எல்.ஐ.சி. ஊழியருக்கு பணி மாறுதல் தொடர்பாக தேசிய ஆணையம் உத்தரவிட அதிகாரம் இல்லை


எல்.ஐ.சி. ஊழியருக்கு பணி மாறுதல் தொடர்பாக தேசிய ஆணையம் உத்தரவிட அதிகாரம் இல்லை
x

எல்.ஐ.சி. ஊழியருக்கு பணி மாறுதல் தொடர்பாக தேசிய ஆணையம் உத்தரவிட அதிகாரம் இல்லை -ஐகோர்ட்டு தீர்ப்பு.

சென்னை,

சென்னையில் உள்ள எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவன கிளையில் வெண்ணிலா என்பவர் கிளை அதிகாரியாக பணியாற்றினார். 2014-ம் ஆண்டு இவர் இடமாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்தார். 2017-ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி கிளைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அவர் சென்னை மாநகருக்குள் மாறுதல் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இவரது கோரிக்கையை உயர் அதிகாரிகள் ஏற்கவில்லை.

இதையடுத்து, அவர் தேசிய எஸ்.சி. ஆணையத்தில் புகார் செய்தார். இந்த புகாரை விசாரித்த ஆணையம், கடந்த 5 ஆண்டுகளில் எல்.ஐ.சி. ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு, இடமாறுதல் தொடர்பான உத்தரவுகளை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரருக்கு உரிய பதவி உயர்வு வழங்கி சென்னை மாநகருக்குள் இடமாறுதல் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எல்.ஐ.சி. மண்டல மேலாளர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அரசியல் அமைப்புச் சட்டம் இந்த ஆணையத்துக்கு சில அதிகாரங்களை வழங்கியுள்ளது. அதன்படி, தேசிய எஸ்.சி. ஆணையத்துக்கு சிவில் கோர்ட்டுக்குரிய அதிகாரம் உள்ளது. ஆனால், ஒரு ஊழியருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இடமாறுதல் வழங்க வேண்டும் என்று அரசுக்கும், அரசு சார்ந்த பொதுநிறுவனத்துக்கும் உத்தரவிட ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. பதவி உயர்வு, இடமாறுதல் எல்லாம் பணி விதிகளின்படி வழங்கப்படுவது. அரசு நடவடிக்கையில் ஏதாவது விதிமீறல் இருந்தால், அதை சரி செய்ய பரிந்துரை செய்யலாமே தவிர, அரசின் நிர்வாக அதிகாரத்தில் ஆணையம் தலையிட முடியாது. எனவே, தேசிய எஸ்.சி. ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story