மீன்பிடி படகுகளுக்கு உரிமம் புதுப்பித்தல்: முதல்-அமைச்சருக்கு மீன்பிடி தொழிற்சங்கம் நன்றி
முதல்-அமைச்சருக்கு மீன்பிடி தொழிற்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மீன்பிடி படகுகளின் பதிவு உரிமம் புதுப்பித்தலை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றி அமைக்கும் வகையில் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதே நேரத்தில், தற்போது வழங்கப்படும் பதிவுகள் அனைத்தும் எந்த மாதத்தில் பதிவு செய்தாலும் எதிர்வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் மீன்பிடி உரிமம் புதுப்பிக்க வேண்டும் என சான்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை மாற்றி மீன்பிடி படகு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 3 ஆண்டுகள் எந்த மாதத்தில் வந்தாலும், அன்றைய தேதியின்படி மீன்பிடி உரிமம் புதுப்பித்து சான்று வழங்கும் வகையில் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத் திருத்தத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.