அரசு விதிமுறைகளை கடைபிடிக்காத 14 பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து


அரசு விதிமுறைகளை கடைபிடிக்காத 14 பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து
x

திருவாரூர் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை கடைபிடிக்காத 14 பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவாரூர்

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை கடைபிடிக்காத 14 பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.

பள்ளி வாகனங்களில் கலெக்டர் ஆய்வு

திருவாரூர் மாவட்ட ஆயூதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுகிறதா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர கால வெளியேறும் வசதி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி ஆகிய வசதிகள் சரிவர உள்ளனவா? என்பதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனங்களை இயக்கிட வேண்டும் என டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வழிகாட்டு நெறிமுறைகள்

பள்ளி வாகனங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருவாரூர், மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 215 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் பள்ளி வாகனங்களில் அவசர கால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக வாகனத்தில் ஏற தாழ்வான படிக்கட்டுகள், வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

14 பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து

இந்த ஆய்வில் கண்காணிப்பு கேமரா, ஜி.பி.ஆர்.எஸ். கருவி, இருக்கைகள் வசதி குறைபாடுகளுடன் விதிமுறைகளை கடைபிடிக்காத 14 பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. 50 வாகனங்களில் சிறுகுறைபாடுகள் இருந்ததால் அவைகள் சரி செய்த பிறகு உரிமம் புதிப்பித்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால் அதை பள்ளி நிர்வாகம் கவனத்திற்கு டிரைவர்கள் எழுத்துபூர்வமாக தெரியப்படுத்த வேண்டும்.

2 குழுக்கள் அமைப்பு

மேலும் பள்ளி வாகனங்கள் விதிமுறை மீறி இயங்குகிறதா? என்பதை கண்காணிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின் போது உதவி கலெக்டர் சங்கீதா, வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி, போலீஸ் துணை சூப்பிரண்டு சிவராமன், வாகன ஆய்வாளர் கருப்பண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story