மீனவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை


மீனவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
x

கீழக்கரையில் புறா கேட்டு தராததால் ஆத்திரமடைந்து மீனவரை கொலை செய்தவருக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம்


கீழக்கரையில் புறா கேட்டு தராததால் ஆத்திரமடைந்து மீனவரை கொலை செய்தவருக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

பந்தய புறா

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மீனவர் குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் ராமசாமி என்பவரின் மகன்கள் முத்துக்குமார் (வயது33), நாகராஜ் (38). இவர்கள் பந்தய புறா வளர்த்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி இவர்கள் அதேபகுதியை சேர்ந்த தக்காளி நாகராஜ் என்பவரிடம் சென்று புறா விலைக்கு கேட்டு உள்ளனர். அவர் தரமறுக்கவே தகராறு ஏற்பட்டு உள்ளது.

அப்போது தக்காளி நாகராஜின் அக்காள் சத்தியாவின் கணவர் குப்பமுத்து மகன் ஆனந்த் (28) என்பவர் கண்டித்துள்ளார். தங்களுக்கு புறா தரமறுத்ததுடன் குடும்பத்துடன் சேர்ந்து பேசுகிறார்களே என்று ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் மற்றும் நாகராஜ் ஆகியோர் இருவரையும் சரமாரியாக தாக்கினார்களாம்.

அந்த சமயத்தில் நாகராஜ் பிடித்து கொள்ள முத்துக்குமார் தன் வேட்டிக்குள் மறைத்து வைத்திருந்த கூர்மையான திருக்கை மீன் முள்ளை எடுத்து ஆனந்தின் மார்பில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ஆனந்த் சிகிச்சைக்காக கீழக்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே ஆனந்த் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கைது

இந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின்படி கீழக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து முத்துக்குமார், நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு நடைபெறும்போது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முத்துக்குமார் இறந்துவிட்டார். இந்தநிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கினை விசாரித்த நீதிபதி விஜயா புறா கேட்டு தராத தால் ஆத்திரமடைந்து திருக்கை மீன் முள்ளால் குத்தி கொலை செய்த நாகராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையம் ரூ.10 ஆயிரம் அபராதமும் அதனை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார்.


Next Story