ஆடு வியாபாரியை கொலை செய்த அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை


ஆடு வியாபாரியை கொலை செய்த அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை
x

கீழக்கரையில் முன்விரோதத்தில் ஆடுவியாபாரியை கொலை செய்த அண்ணன்- தம்பிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம்


கீழக்கரையில் முன்விரோதத்தில் ஆடுவியாபாரியை கொலை செய்த அண்ணன்- தம்பிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

முன்விரோதம்

கீழக்கரை புதுகிழக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் சகுபர் சாதிக் என்பவரின் மகன் லுக்மான்ஹக்கீம் (வயது32). ஆடு வியாபாரியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அமானுல்லா மகன் முகம்மது இம்ரான்கான் என்ற கச்சு மரைக்காயர் (29) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

முகம்மது இம்ரான்கான் புறா, சேவல்களை விற்பனை செய்து வந்துள்ளார். அவர் திருட்டு புறா, சேவல்களை விற்பதாக அதனை வாங்க வருபவர்களிடம் லுக்மான் ஹக்கீம் கூறியதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் லுக்மான் ஹக்கீம் வளர்த்து வந்த ஆடு ஒன்று காணாமல் போனது. இந்த ஆட்டினை தேடி அலைந்தபோது முகம்மது இம்ரான்கான் வீட்டில் கட்டிவைக்கப் பட்டு இருந்ததாம்.

கொலை

இதனை கண்ட லுக்மான் ஹக்கீம் இதுபோன்றுதான் அனைத்தையும் திருடி விற்பனை செய்கிறாயா என்று கேட்டு கண்டித்து ஆட்டினை மீட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முகம்மது இம்ரான்கான் தனது உறவினர்களான ஆதம் என்பவரின் மகன்கள் சதாம்உசேன் (29), முகம்மது தாவூது (31) ஆகியோரை அழைத்து கொண்டு லுக்மான் ஹக்கீம் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை அழைத்து கொண்டு கீழக்கரை ஜாமியாநகர் பகுதிக்கு வந்ததும் தன்மீது பழிசுமத்தி கெட்ட பெயர் ஏற்படுத்துகிறாயா என்று கேட்டு தாக்கி உள்ளார். மேலும் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் லுக்மான் ஹக்கீமை குத்தியதில் அவர் படுகாயமடைந்து பலியானார்.

விசாரணை

இதுகுறித்து லுக்மான் ஹக்கீமின் தாய் முகம்மது பாத்திமா பேகம் அளித்த புகாரின் அடிப்படையில் கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது ஜாமீனில் வெளியில் வந்த முகம்மது இம்ரான்கான் மற்றொரு சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார். மீதம் உள்ள அண்ணன்-தம்பி 2 பேர் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கினை விசாரித்த நீதிபதி விஜயா மேற்கண்ட அண்ணன்- தம்பி 2 பேருக்கும் ஆயுள்தண்டனையும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் அதனை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட முதன்மை அரசு வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார்.


Next Story