தொழிலாளியை மதுபாட்டிலால் குத்திக்கொன்ற 2 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை
தொழிலாளியை மதுபாட்டிலால் குத்திக்கொன்ற 2 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தென்காசி மாவட்டம் கடையம் மாதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் முத்துசெல்வன் (வயது 38).
அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ரேவராஜ் மகன் சிலம்பரசன் (38), சமுத்திரபாண்டியன் மகன் சூட்சமுடையான் (37). நண்பர்களான இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் உள்ள செங்கல்சூளையில் தொழிலாளர்களாக வேலை செய்தனர்.
மதுபாட்டிலால் குத்திக்கொலை
கடந்த 2019-ம் ஆண்டு முத்துசெல்வனின் மனைவி ராஜகுமாரியை சிலம்பரசன், சூட்சமுடையான் ஆகியோர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன், சூட்சமுடையான் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சிலம்பரசன், சூட்சமுடையான் ஆகியோர் கடந்த 10.10.2019 அன்று வழக்கை வாபஸ் பெறக்கோரி முத்துசெல்வனிடம் சமாதானம் பேசுவதற்காக அவரை புலவனூர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிலம்பரசன், சூட்சமுடையான் ஆகிய 2 பேரும் சேர்ந்து மதுபாட்டிலை உடைத்து முத்துசெல்வனின் கழுத்தில் குத்தியும், கல்லால் அவரது தலையில் தாக்கியும் கொலை செய்தனர்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன், சூட்சமுடையான் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, நெல்லை 3-வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் நேற்று தீர்ப்பு கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட சிலம்பரசன், சூட்சமுடையான் ஆகியோருக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், கூட்டு சதிக்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், தடயத்தை மறைக்க முயன்றதற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்தார். மேலும் அவர்கள் இருவரும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சூரசங்கரவேல் ஆஜரானார்.