தேர்தல் முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு


தேர்தல் முன்விரோதம் காரணமாக    வாலிபரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை    விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு
x

தேர்தல் முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

விழுப்புரம்


தேர்தல் முன்விரோதம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூத்தனூர் காலனி பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 25). இவருடைய குடும்பத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் வெங்கடேசன் என்பவருக்கும் இடையே பொங்கல் விழாவில் நடந்த விளையாட்டு போட்டிக்கு பரிசு கொடுக்க பணம் வசூல் செய்வது தொடர்பாகவும், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாகவும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக வெங்கடேசன் மற்றும் அவரது தரப்பினர் கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்ய திட்டம் தீட்டினர். இந்த சூழலில் கடந்த 24.4.2014 அன்று மாலை 3.30 மணியளவில் வெங்கடேசன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த வேலாயுதம், முத்து, வேலு, வடமலை, சக்கரவர்த்தி, அருண், சுப்பிரமணி, குமார், பழனி, ஏழுமலை, நாகலிங்கம், மகாதேவன், அன்பழகன், தவிடன், சந்தீப் ஆகிய 16 பேரும் கையில் ஆயுதத்துடன் திருக்கோவிலூரில் இருந்து எலவனாசூர்கோட்டை செல்லும் சாலையில் ஒரு கோவில் முன்பு பதுங்கியிருந்தனர்.

வாலிபர் கொலை

அந்த சமயத்தில் அவ்வழியாக ஒரு மொபட்டில் வந்த கிருஷ்ணமூர்த்தியை வெங்கடேசன் உள்ளிட்ட 16 பேரும் சேர்ந்து வழிமறித்து உருட்டுக்கட்டை, இரும்புக்குழாயால் தாக்கியதோடு அருகில் இருந்த மெக்கானிக் கடைக்குள் தூக்கிச்சென்று அங்கு வைத்து அவரை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து இறந்தார். உடனே அவர் ஓட்டி வந்த மொபட்டை அங்குள்ள கிணற்றுக்குள் தள்ளிவிட்டு அவர்கள் 16 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தியின் அண்ணன் வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலை மகன் வெங்கடேசன் உள்ளிட்ட 16 பேரையும் கைது செய்து விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

2 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ஜே.வெங்கடேசன், குற்றம் சாட்டப்பட்ட அண்ணாமலை மகன் வெங்கடேசன் (44), நாகலிங்கம் (31) ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், மற்ற 14 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட வெங்கடேசன், நாகலிங்கம் ஆகிய இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்பராயுலு ஆஜரானார்.

1 More update

Next Story