வாலிபரை குத்திக்கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை
வாலிபரை குத்திக்கொன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திண்டுக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சாணார்பட்டியை அடுத்த அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 26). கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி அஞ்சுகுழிபட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. அப்போது ஆனந்தராஜூக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (30), தீபன்ராஜ் (32), அருண்குமார் என்ற அருண்பாண்டி (30) உள்பட 15 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் சத்தியமூர்த்தி உள்பட 3 பேர் ஆனந்தராஜை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தனர். இதுதொடர்பாக சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி மெகபூப் அலிகான் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் சூசை ராபர்ட் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி மெகபூப் அலிகான் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சத்தியமூர்த்தி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மீதமுள்ள 12 பேர் மீதான குற்றச்சாட்டு தகுந்த சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.