வாலிபரை கொன்ற 4 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை


வாலிபரை கொன்ற 4 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 30 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 6:46 PM GMT)

ஓடும் ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசி வாலிபரை கொன்ற 4 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது

கடலூர்

ஓடும் ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசி

வாலிபரை கொன்ற 4 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை

விருத்தாசலம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

விருத்தாசலம், ஜூலை.1-

ஓடும் ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசி வாலிபரை கொன்ற 4 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

நண்பர்கள்

ஒடிசா மாநிலம் சுந்தர் கஹ் மாவட்டம் டூர்கேலா பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் தாஸ்(வயது 26). இவரும், இவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ஜித்தன் கிரி(26), அணில் குமார் ஓஜா(23), சுக் தேவ் கடையா(50), சோட்டு படாயக்(28) ஆகியோரும் தமிழ்நாட்டில் சென்ட்ரிங் வேலை செய்து வந்தனர். அவ்வப்போது சொந்த ஊருக்கு சென்று வருவார்கள்.

இந்நிலையில் சொந்த ஊரில் இருந்து கடந்த 23-12-2019 அன்று சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்த இவர்கள் 5 பேரும் அங்கிருந்து சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

வாக்குவாதம்

விழுப்புரம் அருகே ரெயில் வந்து கொண்டிருந்தபோது ஆகாஷ்தாஸ், எனக்கு வேலைக்கு வர மனமில்லை, மீண்டும் என்னை சொந்த ஊருக்கே அனுப்பி விடுங்கள் என தனது நண்பா்களிடம் கூறினார்.

அப்போது ரூ.3 ஆயிரம் முன்பணம் வாங்கி விட்டு இவ்வளவு தூரம் வந்த பிறகு ஊருக்கு அனுப்பி வைக்க முடியாது, வேலை செய்து விட்டுத்தான் ஊருக்கு செல்ல வேண்டும் என அவரை நண்பர்கள் கட்டாயப்படுத்தியதால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ரெயிலில் இருந்து தூக்கி வீசினர்

இதில் ஆத்திரமடைந்த ஜித்தன் கிரி, அணில் குமார் ஓஜா, சுக் தேவ் கடையா, சோட்டு படாயக் ஆகிய 4 பேரும் ஆகாஷ் தாசை பிடித்து விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கும் தாழநல்லூர் ரெயில் நிலையத்திற்கும் இடைபட்ட பகுதியில் ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசினர். இதில் படுகாயம் அடைந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் 3-ல் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்ததை அடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

ஆயுள் தண்டனை

இதில் குற்றம் சாட்டப்பட்ட ஜித்தன் கிரி, அணில் குமார் ஓஜா, சுக் தேவ் கடையா, சோட்டு படாயக் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும் விதித்து நீதிபதி பிரபா சந்திரன் தீர்ப்பளித்தார்.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்ரமணியன் ஆஜரானார்.


Next Story