மனைவியை எரித்துக்கொன்ற முதியவருக்கு ஆயுள்தண்டனை

மனைவியை எரித்துக்கொன்ற முதியவருக்கு ஆயுள்தண்டனை
மகள் வீட்டு பால்காய்ச்சும் நிகழ்ச்சி நடக்க கூடாது என்று மனைவியை எரித்துக்கொன்ற முதியவருக்கு கோவை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பால்காய்ச்சும் நிகழ்ச்சி
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சமணமுதலிபுதூரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது80). இவருடைய மனைவி காளியம்மாள் (70). இவர்களுடைய மகள் ராஜேஸ்வரி, மகன் ராஜா.
இந்த நிலையில் வேலுசாமி எந்த வேலைக்கும் செல்லாமல், தான் குடியிருக்கும் வீட்டையும், நிலத்தையும் விற்கப்போவதாக சொல்லி வந்துள்ளார். இதனால் மகள் ராஜேஸ்வரி அந்த நிலத்தை ரூ.2 லட்சத்துக்கு வாங்குவதாக கூறி ரூ.1 லட்சத்து 80 ஆயிரம்வரை கொடுத்துள்ளார். இந்தநிலையில் கடந்த 23.12.2019 அன்று வீட்டு கிரைய பத்திரம்பதிவு செய்யப்பட்டது. வாங்கிய இடத்தில் சிறிய வீடு கட்டி பால்காய்ச்சும் நிகழ்ச்சியை நடத்த மகள் ராஜேஸ்வரி திட்டமிட்டார்.
மேலும் ரூ.1 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டு வேலுசாமி மகளிடம் தகராறு செய்தார். மகள் சிரமப்படுவதாகவும், கூடுதலாக பணம் கேட்க வேண்டாம் என்றும் மனைவி காளியம்மாள், மகளுக்கு சாதமாக கூறினார்.இதனால் மனைவி மீது வேலுசாமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. 28.8.2020 அன்று பால்காய்ச்சுவதற்கான நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
எரித்துக்கொலை
இந்த நிலையில் மனைவி காளியம்மாளை எரித்துக்கொன்று பால்காய்ச்சும் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று வேலுசாமி திட்டமிட்டார். இதற்காக அன்று அதிகாலை 1 மணியளவில் 7 வயது பேத்தியுடன் தூங்கிக்கொண்டு இருந்த மனைவி காளியம்மாள் மீது மண்எண்ணையை ஊற்றினார்.விழித்து பார்த்த மனைவி காளியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் வேலுசாமி தீப்பெட்டியை பற்றவைத்து மனைவியின் உடல்மீது போட்டுள்ளார். இதனால் தீயில் கருகிய காளியம்மாள், உடன் இருந்த பேத்தியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டு அறையில் இருந்து உடனடியாக தூக்கி வீசினார். இதனால் லேசான காயங்களுடன் பேத்தி உயிர் தப்பினார்.
உடல் கருகிய காளியம்மாள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
ஆயுள் தண்டனை
இதைத்தொடர்ந்து கோட்டூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வேலுசாமியை கைது செய்தனர். கோவை குண்டுவெடிப்பு சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது. நேரில் பார்த்த சாட்சியாக 7 வயது சிறுமியும் தாத்தாவுக்கு எதிராக சாட்சியம் அளித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாலு, குற்றம்சாட்டப்பட்ட வேலுசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் கே.கார்த்திகேயன் ஆஜர் ஆகி வாதாடினார்.






