கார் டிரைவருக்கு ஆயுள் தண்டனை
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கார் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவை,
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கார் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கார் டிரைவர்
திருச்சி ஸ்ரீரங்கம் மேலவீதியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 40). இவர் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதே வீட்டில் 35 வயது பெண் வீட்டு வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் இருந்தனர்.
கார் டிரைவரான மணிவேலுக்கு அந்த பெண்ணின் மீது மோகம் ஏற்பட்டது. இதனால் அவரை எப்படியாவது அடையவேண்டும் என்று எண்ணினார்.
பாலியல் பலாத்காரம் செய்து கொலை
இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு சென்று இருந்தார். அவர்கள் வருவதற்குள் எப்படியாவது வேலைக்கார பெண்ணை அடைய வேண்டும் என்று மணிவேல் திட்டம் திட்டினார்.
இதன்படி கடந்த 17-5-2018 அன்று இரவு 7 மணிக்கு அந்த பெண்ணை கண்ட மணிவேல் வெளிநாடு சென்ற வீட்டின் உரிமையாளர் திரும்பி வரஉள்ளதால், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று அழைத்தார்.
இதனை உண்மை என்று நம்பிய அந்த பெண் அவசர அவசரமாக வந்து வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.அப்போது அங்கு வந்த மணிவேல், வீட்டின் கதவை உட்பக்கமாக பூட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் இதுகுறித்து வெளியே கூறிவிடுவார் என்ற அச்சத்தில், அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தார். மேலும் பெண்ணின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையையும் பறித்துக்கொண்டார்.
உடல் சாக்கடையில் வீச்சு
தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை சாக்குமூட்டையில் கட்டி நள்ளிரவு சிங்காநல்லூர் குளம் அருகே உள்ள சாக்கடை கால்வாய்க்குள் வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். இதற்கிடையே வேலைக்கு சென்ற மனைவி வீடு திரும்பாததால், அந்த பெண்ணின் கணவர் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.
2 நாட்களுக்கு பின்னர் சிங்காநல்லூர் போலீசாருக்கு சாக்கடை கால்வாயில் பிணம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு, விசாரணை நடத்தினர்.
இதில் இறந்தது தொழில் அதிபர் வீட்டில் வேலை பார்த்த பெண் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த பெண்ணை கார் டிரைவர் மணிவேல் பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று சாக்கடையில் வீசியது தெரியவந்தது.
ஆயுள் தண்டனை
அதனைத்தொடர்ந்து போலீசார் மணிவேலை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் பெண்ணை கொலை செய்த வழக்கில் மணிவேலுக்கு ஆயுள் தண்டனையும், பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 10 ஆண்டு சிறையும், நகையை அபகரித்தல், தடயத்தை அழித்தல் வழக்குகளில் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிஷா ஆஜராகி வாதாடினார்.