தம்பியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


தம்பியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x

குடிபோதையில் தகராறு செய்த தம்பியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோயம்புத்தூர்

கோவை

குடிபோதையில் தகராறு செய்த தம்பியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

குடிபோதையில் தகராறு

கோவை உக்கடம் எஸ்.எச்.காலனி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மனைவி கருப்பம்மாள். இவர்களுக்கு சுப்பிரமணி (வயது 56), செல்வராஜ் (52) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இந்த 2 பேருக்கும், திருமணம் ஆகவில்லை.

இதற்கிடையில் பெற்றோர் உயிரிழந்ததால், சுப்பிரமணி மற்றும் செல்வராஜ் மட்டும் வசித்து வந்தனர். மேலும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். ஆனால் தினமும் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வரும் செல்வராஜ், தனது அண்ணன் சுப்பிரமணியிடம் தகராறு செய்து வந்தார்.

கழுத்தை இறுக்கி கொலை

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய செல்வராஜ் குடிபோதையில் இருந்தார். அப்போது வீட்டில் இருந்த சுப்பிரமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி, தனது தம்பி என்றும் பாராமல் செல்வராஜை பிடித்து அவருடைய தலையை தரையில் ஓங்கி அடித்தார். எனினும் ஆத்திரம் தீராத அவர், வீட்டில் இருந்த கயிற்றால் செல்வராஜின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் உடலை வேறு பகுதிக்கு கொண்டு சென்று வீச திட்டமிட்டார். ஆனால் பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் அந்த திட்டம் நிறைவேறவில்லை.

ஆயுள் தண்டனை

இது குறித்து தகவல் அறிந்த உக்கடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சுப்பிரமணியை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பான வழக்கு கோவையில் வெடிகுண்டுகளை விசாரிக்கும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சுப்பிரமணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து நீதிபதி டி.பாலு தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.


Next Story