தொழிலாளியை வெட்டிக்கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை
தொழிலாளியை வெட்டிக்கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதேபோல் மற்றொரு வழக்கில் பெண்ணை கொன்றவருக்கும் ஆயுள் சிறை விதிக்கப்பட்டது.
தொழிலாளியை வெட்டிக்கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதேபோல் மற்றொரு வழக்கில் பெண்ணை கொன்றவருக்கும் ஆயுள் சிறை விதிக்கப்பட்டது.
கூலி தொழிலாளி
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே இளையநயினார்குளம் வடக்கூரைச் சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் அய்யப்பன் (வயது 25). கூலி தொழிலாளி. இவருடைய அண்ணன் தாணுசெல்வம் (40).
அய்யப்பன் தனது அண்ணன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் அண்ணன்-தம்பி இடையே முன்விரோதம் இருந்தது.
ஆயுள் தண்டனை
கடந்த 25.9.2017 அன்று அண்ணன்-தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தாணுசெல்வம் அரிவாளால் அய்யப்பனை வெட்டிக்கொலை செய்தார். இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாணுசெல்வத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை 3-வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், குற்றம் சாட்டப்பட்ட தாணுசெல்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதம் விதித்தும் நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சூரசங்கரவேல் ஆஜரானர்.
மற்றொரு வழக்கு
இதேபோன்று நெல்லை மானூர் அருகே கானார்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (45). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான அந்தோணிராஜ் (30) என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
கடந்த 22.7.2020 அன்று அந்தோணியம்மாள் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த அந்தோணிராஜ் அவதூறாக பேசி, அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், குற்றம் சாட்டப்பட்ட அந்தோணிராஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார்.