மனைவி-கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
சிப்காட் பகுதியில் நடந்த தொழிலாளி கொலை வழக்கில் அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளி கொலை
சிப்காட் அடுத்த கொண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 35). இவரது மனைவி அமலா (34). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. விநாயகமூர்த்தி அடிக்கடி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விநயாகமூர்த்தியின் மனைவிக்கு, கணவரின் நண்பரான ரமேஷ் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததை அறிந்த விநாயகமூர்த்தி, மனைவி அமலாவை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், அமலாவுடன் சேர்ந்து விநாயகமூர்த்தியை கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதியன்று அதே பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்த போது கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.
ஆயுள் தண்டனை
இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலா மற்றும் ரமேஷ் ஆகியோரை கைதுசெய்தனர். இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை 2-வது கூடுதல் அமர்வு மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் ரமேஷ் மற்றும் அமலா ஆகிய இருவருக்கும் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், தடயத்தை அழித்ததற்காக தலா 7 ஆண்டுகள் தண்டனைம் விதித்து நீதிபதி ஜான்சுந்தர்லால் தீர்ப்பு வழங்கினார். மேலும் இருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.