வாலிபருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர் அருகே சுமை தூக்கும் தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த சக தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
சுமை தூக்கும் தொழிலாளி
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 51). இவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கூலிபாளையம் நால்ரோட்டில் உள்ள அந்தோணிராஜ் என்பவரின் பழைய இரும்பு குடோனில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இதே குடோனில் தூத்துக்குடி மாவட்டம் மறவர்மடத்தை சேர்ந்த ராமர் (34) என்பவரும் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இருவரும் குடோனில் ஒரு அறையில் தங்கியிருந்ததால் அவர்களுக்குள் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 24-12-2017 அன்று மதிய உணவு சாப்பிடும்போது, உணவை கீழே போடாமல் சாப்பிடுமாறு ராமர் சத்தம் போட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அங்கு கிடந்த கல்லை எடுத்து ரவிச்சந்திரனின் தலையில் ராமர் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரவிச்சந்திரன் இறந்தார்.
ஆயுள் தண்டனை
உடனடியாக இதுகுறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்து ராமரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
கொலை குற்றத்துக்காக ராமருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.






