மனைவியின் தலையில் குழவிக்கல்லைபோட்டு கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை


மனைவியின் தலையில் குழவிக்கல்லைபோட்டு கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மனைவியின் தலையில் குழவிக்கல்லைபோட்டு கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

கோயம்புத்தூர்

கோவை

கோவை அருகே மனைவியின் தலையில் குழவி கல்லை தூக்கி போட்டு கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்து.

குடிப்பழக்கம்

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 65). கூலி தொழிலாளி. இவரது மனைவி மாராத்தா என்கிற மரியம்மாள் (62). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் சாமிநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி குடித்து விட்டு தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.

மேலும் சாமிநாதன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததுடன், மது குடிக்க பணம் கேட்டு தனது மனைவியை துன்புறுத்தியும் வந்து உள்ளார். இதனிடையே மாராத்தா என்கிற மரியம்மாள் வீட்டு செலவிற்காக ஆடுகளை வளர்த்து வந்து உள்ளார். நாள்தோறும் கணவர் குடித்து விட்டு சண்டை போட்டதால், ஆடுகளை மேய்த்து விட்டு வந்ததும், இரவில் தனது மகன் வீட்டில் தங்கி உள்ளார்.

தலையில் குழவி கல்லை போட்டு கொலை

இந்த நிலையில் கடந்த 1.3.2020-ந்தேதி அன்று வழக்கம் போல் மரியம்மாள் ஆடு மேய்க்க சென்று விட்டு, இரவில் வீட்டிற்கு வந்தார். அப்போது சாமிநாதன், அவரிடம் எதற்காக சமையல் செய்து வைக்காமல் சென்று விட்டாய் என்று கூறி சண்டை போட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சாமிநாதன் வீட்டில் கிடந்த குழவிக்கல்லை எடுத்து மரியம்மாள் தலைமீது போட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் மரியம்மாளை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சாமிநாதனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு கோவை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, மனைவியை கொலை செய்த சாமிநாதனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜிஷா ஆஜராகி வாதாடினார்.


Next Story