கள்ளக்காதலை கண்டித்தமனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனைகிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


கள்ளக்காதலை கண்டித்தமனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனைகிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 18 July 2023 1:00 AM IST (Updated: 18 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கள்ளக்காதலை கண்டித்த மனைவியை அடித்துக்கொன்ற கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

கூலித்தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா என்.கொத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சுளா (45). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள்.

ராஜேந்திரன் தனது மனைவி மஞ்சுளாவுடன் தளி அருகே உள்ள பி.ஆர்.தொட்டி கிராமத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு ஆனேக்கல்லுக்கு கூலி வேலைக்காக ராஜேந்திரன் சென்றார். அங்கு அவருக்கும், அவருடன் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

அடித்துக்கொலை

இதை அறிந்த மஞ்சுளா தனது கணவர் ராஜேந்திரனை கண்டித்தார். ஆனாலும் ராஜேந்திரன் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந் தேதி குடிபோதையில் ராஜேந்திரன் வீட்டிற்கு வந்தார்.

அந்த நேரம் தனது கணவரிடம் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு மஞ்சுளா கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் வீட்டில் இருந்த கட்டையால் மனைவி மஞ்சுளாவை அடித்துக்கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த கொலை வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட, ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.


Next Story