வாலிபரை கொன்ற அண்ணன், தம்பிக்கு ஆயுள்தண்டனை


வாலிபரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சிவகங்கை

மாணவியை கேலி செய்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

வெட்டிக்கொலை

சிவகங்கை அருகே உள்ள படமாத்தூர் வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 30). இவர் படமாத்துரை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவரை கேலி செய்தாராம். இதனால் மாணவியின் உறவினர்களான முருகன் (52), அவரது தம்பி ராஜகோபால் (38) ஆகிய இரண்டு பேரும் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி குணசேகரனை படமாத்தூர் பஸ் நிலையத்தில் வைத்து தாக்கினார்களாம். இந்த சம்பவம் குறித்து குணசேகரன் தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தன்னுடைய தாய் மாமா மணிகண்டன் (28) என்பவரிடம் கூறினார்.

இதையடுத்து மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் படமாத்தூரில் உள்ள முருகனின் வீட்டிற்கு சென்று சம்பவம் குறித்து விசாரித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் முருகன் மற்றும் ராஜகோபால் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் உயிரிழந்தார்.

ஆயுள்தண்டனை

இந்த சம்பவம் தொடர்பாக பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், ராஜகோபாலை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத்ராஜ், குற்றம் சாட்டப்பட்ட முருகன் மற்றும் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராத தொகையை இறந்து போன மணிகண்டனின் மனைவி முக்திஸ்வரிக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.


Next Story