சாதியை சொல்லி தாக்கிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை


சாதியை சொல்லி தாக்கிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை
x

தொழிலாளியை சாதியைச் சொல்லி திட்டி, தாக்கிய வழக்கில் 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிவகங்கை
தொழிலாளியை சாதியைச் சொல்லி திட்டி, தாக்கிய வழக்கில் 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தொழிலாளி மீது தாக்குதல்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 52). தொழிலாளி. இவரை முன்விரோதம் காரணமாக கடந்த 2008-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 31), கிருங்காகோட்டையை சேர்ந்த ஆண்டவன் (44), குணசேகரன் (44), தர்மராஜ் (35) ஆகிய 4 பேர் சாதியை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரின்பேரில் சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

4 பேருக்கு ஆயுள் தண்டனை

அரசு தரப்பில் வக்கீல் துஷாந்த் பிரதீப் குமார் ஆஜரானார். விசாரணை முடிவில், இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தலா ஆயுள் தண்டனையும், தலா ரூ.13 ஆயிரத்து 300 அபராதமும் விதித்து நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார்.

சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட ராமுவின் கை எலும்புகள் முறிந்ததாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

வன்கொடுமை சம்பவங்களில் 10 ஆண்டுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட நேர்ந்தால், அதை எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச்சட்டப்பிரிவு 3(2)(5)-ன்கீழ் ஆயுள்தண்டனையாக விதிக்கலாம் என சட்டம் கூறுகிறது. அந்த சட்டத்தின்படி மேற்கண்ட குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவே முதல்முறை

இந்த வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் துஷாந் பிரதீப் குமார் கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட ராமு, கூலித்தொழிலாளி ஆவார். இவரை முன் விரோதம் காரணமாக சாதியை சொல்லி திட்டி தாக்கியுள்ளனர். இதனால் இந்த வழக்கு இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு 326 மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவுகளின்கீழ் வருவதால் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையில் உள்ள வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் இந்த சட்டப்பிரிவுகளின்கீழ் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பது இதுவே முதல் முறையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.Next Story