சிறுவனை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை


சிறுவனை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறுவனை தகாத உறவுக்கு கட்டாயப்படுத்தி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்தும், அவரது பெற்றோரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது.

மதுரை

சிறுவனை தகாத உறவுக்கு கட்டாயப்படுத்தி கொலை செய்த வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்தும், அவரது பெற்றோரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சிறுவன் கொலை வழக்கு

மதுரை மாவட்டம் உச்சப்பட்டி ஊராட்சி முனியாண்டிபுரத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் பாண்டிகுமார் (வயது 25). கடந்த 2016-ம் ஆண்டில் 8 வயது சிறுவன் தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தான். அவனை மறைவான பகுதிக்கு அழைத்து சென்று தகாத உறவுக்கு கட்டாயப்படுத்தி உள்ளார். இவருக்கு மற்றொரு சிறுவன் ஒருவனும் உடந்தையாக இருந்துள்ளான்.

இவர்களின் கட்டாயத்தினால் மயங்கிய 8 வயது சிறுவனை, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்துவிட்டான். பின்னர் அந்த சிறுவனின் உடலை மறைவான இடத்தில் வீசிவிட்டு அவர்கள் தப்பினர்.

3 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் சிறுவனை கொலை செய்ததாக பாண்டிகுமாரையும், சிறுவனின் உடலை மறைக்க பாண்டிகுமாரின் பெற்றோரும் உதவியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பாண்டிகுமார், அவரது தந்தை சேகர், தாயார் அம்சவல்லி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் நீதிபதி கிருபாகரன் மதுரம் விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜான்சிராணி ஆஜராகி, சிறுவனை திட்டமிட்டு கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை மறைவான இடத்திற்கு கொண்டு சென்று வீசியுள்ளனர் என வாதாடினார்.

அப்போது சிறுவன் கொலையில் பாண்டிகுமாரின் பெற்றோருக்கு எந்த தொடர்பும் இல்லை என வக்கீல் எஸ்.சுரேஷ்குமார் ஆஜராகி வாதாடினார்.

வாலிபருக்கு ஆயுள்தண்டனை

விசாரணை முடிவில், சிறுவனை கொலை செய்ததற்கான பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. எனவே இந்த வழக்கில் கைதான பாண்டிகுமாருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அவரது பெற்றோரான சேகர், அம்சவல்லி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவர்களை விடுதலை செய்தும், இறந்த சிறுவனின் பெற்றோருக்கு இழப்பீடாக ரூ.4 லட்சத்தை அரசு தரப்பில் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.


Next Story