வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை
சிறுமியை பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவை
சிறுமியை பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுமி பலாத்காரம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 31 வயது வாலிபர். இவர் 9-வயதுடைய சிறுமியின் தாயை 2-வதுதாக திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் சிறுமியின் தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அந்த சிறுமி தனது 31 வயது வளர்ப்பு தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ள காலக்கட்டத்தில் வீட்டின் அருகே உள்ள காலிஇடத்தில் வைத்து வளர்ப்பு தந்தை சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி பள்ளி ஆசிரியையிடம் கூறி அழுது உள்ளார்.
ஆயுள் தண்டனை
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியை உடனே இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து குழந்தைகள் நல அதிகாரி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியின் வளர்ப்பு தந்தை மீது போக்சோ மற்றும் மிரட்டல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், மிரட்டல் வழக்கில் ஒரு ஆண்டு சிறையும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பளித்தார். மேலும் தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.