டிரைவருக்கு ஆயுள் தண்டனை


டிரைவருக்கு ஆயுள் தண்டனை
x

கோவையில் கட்டிட தொழிலாளியை கொலை செய்த வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கோயம்புத்தூர்

கோவை, ஜூன்.15-

கோவையில் கட்டிட தொழிலாளியை கொலை செய்த வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

வாகனம் நிறுத்துவதில் தகராறு

கோவை வடவள்ளி அருகே உள்ள காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 18). கட்டிட தொழிலாளி. இவர் தனது உறவினர் ராஜ்குமார் (53), நண்பர் முருகன் என்ற டேனியல் ஆகியோருடன் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி காலையில் அத்தனூர் அம்மன்கோவில் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சுப்பிரமணியன் (54) என்பவர் சரக்கு வாகனத்தை நிறுத்த வந்தார். இதையடுத்து அவர் மணிகண்டனின் மோட்டார் சைக்கிளை வேறு இடத்தில் நிறுத்துமாறு கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

ஆயுள் தண்டனை

அன்றைய தினம் மாலையில் மணிகண்டன், ராஜ்குமார், முருகன் அம்மன்கோவில் அருகே உள்ள குளத்தின் கரையோரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த டிரைவர் சுப்பிரமணியன் மீண்டும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் மறைத்து வைத்திருந்த உருட்டு கட்டையை எடுத்து மணிகண்டனை தாக்கினார். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தடுக்க வந்த முருகனும் காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. சாட்சி விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் மணிகண்டனை கொலை செய்த சுப்பிரமணியனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி டி.பாலு தீர்ப்பளித்தார். அத்துடன் ரூ.7,500 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கார்த்திகேயன் வாதாடினார்.


Next Story