விவசாயிக்கு ஆயுள் தண்டனை


விவசாயிக்கு ஆயுள் தண்டனை
x

மனைவியின் கள்ளக்காதலனை கொன்ற வழக்கில், விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திண்டுக்கல்

விவசாயி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சின்ன அழகு என்ற நல்லியப்பன் (வயது 45). விவசாயி. இவருடைய மனைவிக்கும், பக்கத்து வீட்டுக்காரரான துரைப்பாண்டி (44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த சின்ன அழகு மனைவியை கண்டித்தார். இதனால் கோபமடைந்த அவருடைய மனைவி, கணவரை பிரிந்து தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தனது மனைவி பிரிந்து சென்றதற்கு துரைப்பாண்டி தான் காரணம் என்று நினைத்த சின்ன அழகு, கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி, மதுபானம் குடிக்கலாம் என துரைப்பாண்டிக்கு ஆசைவார்த்தை கூறி நத்தம் அருகே துவாரபதி மலைப்பகுதிக்கு அழைத்துச்சென்றார். பின்னர் மதுபோதையில் இருந்த துரைப்பாண்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

ஆயுள் தண்டனை

இதுதொடர்பான புகாரின் பேரில் நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன அழகுவை கைது செய்தனர். மேலும் அவர் மீது திண்டுக்கல் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். அரசு தரப்பில் வக்கீல் சூசை ராபர்ட் ஆஜராகி வந்தார்.

பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சின்ன அழகுவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரவணன் உத்தரவிட்டார்.


Next Story