தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x

நண்பரின் 6 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர்


நண்பரின் 6 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நண்பரின் 6 வயது மகள்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் வேலு என்கிற வேலுச்சாமி(வயது 49). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ந் தேதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்தார்.

அப்போது அங்கு நண்பரின் 6 வயது மகள் மட்டுமே இருந்தாள். அவளிடம் அப்பாவும், அம்மாவும் எங்கே என்று வேலுச்சாமி கேட்டார். அதற்கு அந்த சிறுமி, அப்பா தூங்குவதாகவும், அம்மா பக்கத்து வீட்டிற்கு சென்று இருப்பதாகவும் கூறினாள்.

பாலியல் பலாத்காரம்

உடனே அந்த சிறுமியை வேலுச்சாமி குளியல் அறைக்கு அழைத்து சென்று முத்தம் கொடுத்ததுடன், சிறுமியை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.

இதனால் வலியால் துடித்த அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டில் இருந்து பக்கத்து வீட்டிற்கு ஓடிச் சென்றாள். அங்கு இருந்த அந்த சிறுமியின் தாய், மகள் அழுது கொண்டே வருவதை பார்த்து பதற்றம் அடைந்து, எதற்காக அழுகிறாய்? என கேட்டுள்ளார்.

கைது

அதற்கு சிறுமி நடந்த விவரத்தை அழுது கொண்டே கூறியுள்ளாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர். மேலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

ஆயுள் தண்டனை

பின்னர் கைது செய்யப்பட்ட வேலுச்சாமியை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரணை செய்து வேலுச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில்வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.


Next Story