காவலாளியை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
காவலாளியை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
கோவை
மது குடிக்க பணம் தர மறுத்த காவலாளியை உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டு வெடிப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
காவலாளி
கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 65). இவர் சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மகன் குமரவேல் (36). இவர், எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் குடித்து விட்டு கிருஷ்ணனிடம் தகராறு செய்து வந்தார்.
இதனால் அவர்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் உறவினர்கள் அவர்களை சமாதானப்படுத்தி வந்தனர். இதற்கிடையே மதுப்பழக்கம் அதிகமானதால் குமரவேல், தனது தந்தையிடம் பணம் கேட்டு சண்டை போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன் கத்தியால் தனது மகன் குமரவேலை குத்தி னார். இதில் காயமடைந்த குமரவேல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ஆயுள் தண்டனை
இது குறித்த புகாரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் கிருஷ்ணன் வெளியே வந்தார். இந்த நிலையில் கடந்த 3.9.2019 அன்று குமரவேல் மீண்டும் தனது தந்தையிடம் சென்று மது குடிப்பதற்கு பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார்.
ஆனால் கிருஷ்ணன் பணம் தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த குமரவேல், கிருஷ்ணனை கீழே தள்ளி, உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரவேலை கைது செய்தனர்.
இது குறித்த வழக்கு கோவை குண்டு வெடிப்பு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா, தந்தையை கொலை செய்த குமரவேலுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.