தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

கோயம்புத்தூர்

கோவை

வால்பாறையில் தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தொழிலாளி

கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகரை சேர்ந்தவர் பழனிராஜா (வயது 31) தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள தனது அக்காள் அனுசுயா (35) வீட்டில் வசித்து வந்தார். அக்காள் கணவரான கனகரத்தினம் (45) குடித்துவிட்டு அனுசுயாவிடம் தகராறு செய்து வந்து உள்ளார். இதை பழனிராஜா கண்டித்து உள்ளார்.

இதனால் கனகரத்தினத்துக்கும், பழனிராஜாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கனகரத்தினம், இனிமேல் எனது வீட்டுக்கு வரக்கூடாது என்றுக்கூறி பழனிராஜாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி உள்ளார்.

குத்தி கொலை

இருந்தபோதிலும் அனுசுயா, தனது தம்பி பழனிராஜாவை வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்து உள்ளார். இதை பார்த்த கனகரத்தினம், கோபம் அடைந்து மீண்டும் பழனிராஜாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டு, வெளியே சென்று உள்ளார்.பின்னர் மாலையில் அவர் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் பழனிராஜா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஏன் இங்கு வந்தாய் என்றுக்கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கனகரத்தினம் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பழனிராஜாவை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பழனிராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆயுள் தண்டனை

இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகரத்தினத்தை கைது செய்தனர். பின்னர் இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட கனகரத்தினத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பு கூறினார்.


Next Story