முன்விரோத தகராறில்விவசாயியை அடித்துக்கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனைவிழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு


முன்விரோத தகராறில்விவசாயியை அடித்துக்கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனைவிழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 12 Jan 2023 6:45 PM GMT)

முன்விரோத தகராறில் விவசாயியை அடித்துக்கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்

விவசாயி அடித்துக்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை அடுத்த முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 61), விவசாயி. இவருடைய குடும்பத்திற்கும், அவரது சகோதரர் சிங்காரவேல் குடும்பத்திற்கும் வீட்டுமனை பாகப்பிரிவினை செய்வது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 5.10.2020 அன்று முன்விரோதம் காரணமாக சிங்காரவேல் மகன்களான ஹரிகிருஷ்ணன் (35), ராஜசேகர் ஆகியோர் ஒன்றுசேர்ந்து ஏழுமலையையும், அவரது மகன் வெங்கடேசனையும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி எழுமலை இறந்தார்.

வாலிபருக்கு ஆயுள் தண்டனை

இதுகுறித்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிகிருஷ்ணன், ராஜசேகர் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட ஹரிகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், ராஜசேகரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஹரிகிருஷ்ணன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story