காவலாளியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை உறுதி- ஐகோர்ட்டு உத்தரவு
ராஜபாளையத்தில் தனியார் மில் காவலாளியை அரிவாளால் வெட்டி கொன்றவருக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனையை மதுரை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
ராஜபாளையத்தில் தனியார் மில் காவலாளியை அரிவாளால் வெட்டி கொன்றவருக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனையை மதுரை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
கொலை வழக்கில் தண்டனை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் முருகேசராஜா (வயது 62). தனியார் மில் காவலாளியாக பணியாற்றினார். அதே தெருவில் வசித்தவர் சந்திரன் (45). இவருடைய வீட்டின் அருகில் இருந்த காலி மனையை முருகேசராஜாவின் உறவினர் ஒருவர் வாங்கி வீடு கட்டியுள்ளார். இது தொடர்பாக முருகேசராஜாவுக்கும், சந்திரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 19.11.2015 அன்று முருகேசராஜா ரேஷன் கடையில் இருந்து தனது வீட்டுக்கு நடந்து வந்தபோது எதிரில் வந்த சந்திரன், அரிவாளால் முருகேசராஜாவை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த முருகேசராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சந்திரனை ராஜபாளையம் வடக்கு போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. சந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து 2018-ம் ஆண்டில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி சந்திரன் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
தண்டனை உறுதி
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது கூடுதல் அரசு வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி, மனுதாரருக்கும், இறந்தவருக்கும் இடையே சிவில் பிரச்சினை காரணமாக அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. முருகேசராஜா மீது மனுதாரர் வெறுப்பை வளர்த்து வந்தார். அதன்காரணமாக அவரை கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர். மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளன. இவற்றை கருத்தில் கொண்டு இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்
விசாரணை முடிவில், மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் கீழ்கோர்ட்டில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு உள்ளன. எனவே இந்த வழக்கில் மனுதாரருக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்பதால், அந்த தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம்.
இந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு வழங்கிய ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், மனுதாரரை உடனடியாக பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.