ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வரும் வாழ்நாள் சான்றிதழ் சேவை
ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வரும் வாழ்நாள் சான்றிதழ் சேவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக கருவூலம் மற்றும் கணக்குகள் ஆணையருக்கு நிதித்துறை சிறப்பு செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நடப்பு ஆண்டு ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் ஓய்வூதியர்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்காக சில நடைமுறைகளை ஏற்படுத்தி, அதை ஓய்வூதியர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.
அதாவது டி.எல்.சி. என்ற மின்னணு வாழ்நாள் சான்றிதழை 'ஜீவன் பிரமான்' இணையதள சேவை; 'ஐ.பி.பி.பி.' என்ற வீட்டு வாசலுக்கு வரும் இந்திய தபால் 'பேமெண்ட்' வங்கி சேவை; இ.சேவை மையம்; 'ஜீவன் பிரமான்' இணையதள சேவையுடன் இணைக்கப்பட்ட விரல் ரேகை வசதியை கொண்ட ஓய்வூதியர்கள் சங்கத்தின் சேவை;
தபால் மூலம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பது; நேரில் சென்று ஆஜராவது ஆகிய சேவைகளை அவரவர் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்துகொள்ளலாம்.
'ஐ.பி.பி.பி.' சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பெறும் சேவை, ஓய்வூதியர்களின் வீட்டு வாசல் வரை வரவுள்ளது. 'ஜீவன் பிரமான்' இணையதளம் மூலம் சான்றிதழை பெறுவதற்காக 200 பயோமெட்ரிக் உபகரணங்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் இந்த சேவைகள் பற்றி ஓய்வூதியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான உத்தரவு, மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.