பரமத்திவேலூர் அருகே பெண் கொலை வழக்கில் தம்பதிக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


பரமத்திவேலூர் அருகே  பெண் கொலை வழக்கில் தம்பதிக்கு  ஆயுள் தண்டனை  நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே பெண்ணை கொலை செய்து செங்கல் சூளையில் புதைத்த வழக்கில் கணவன், மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நாமக்கல்

பரமத்திவேலூர் அருகே பெண்ணை கொலை செய்து செங்கல் சூளையில் புதைத்த வழக்கில் கணவன், மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கூலித்தொழிலாளி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வில்லிப்பாளையத்தை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சவுந்தர்யா (வயது 21). இவருக்கு செல்லதுரை என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருந்தது. இதனிடையே சவுந்தர்யாவுக்கு பரமத்திவேலூர் பழனியப்பா ஆயில் மில் தெருவை சேர்ந்த மனோகரன் மகன் சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி சவுந்தர்யா மாயமானார். இதுகுறித்து சவுந்தர்யாவின் தாயார் தங்கம்மாள் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தார்.

கொலை

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சவுந்தர்யாவை தேடி வந்தனர். பின்னர் போலீசாரின் விசாரணையில் சூர்யாவை விட்டு சவுந்தர்யா பிரிந்து செல்லாததால், சூர்யாவின் பெற்றோர் மனோகரன் மற்றும் சுமதி ஆகியோர் சேர்ந்து சவுந்தர்யாவை அடித்துக்கொலை செய்து அவருடைய உடலை செங்கல் சூளை ஒன்றில் புதைத்துவிட்டு சவுந்தர்யா காணாமல் போனதாக சூர்யா மற்றும் சவுந்தர்யாவின் குடும்பத்தினரிடம் கணவன், மனைவி நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் பரமத்திவேலூர் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் விஜயபாரதி வாதாடினார். இந்த நிலையில் வழக்கில் விசாரணை அனைத்தும் முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆயுள் தண்டனை

அதில் கூலித்தொழிலாளிகளான மனோகரன் மற்றும் சுமதிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினி தீர்ப்பு கூறினார். மேலும் இருவருக்கும் தலா ரூ.20‌ ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து மனோகரன் மற்றும் சுமதியை கோவையில் உள்ள சிறைகளுக்கு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.


Next Story