பாம்பன் புதிய ரெயில் பாலத்துக்கு 'லிப்ட்' முறையில் தூக்குப்பாலம்
பாம்பன் புதிய ரெயில் பாலத்துக்கு ‘லிப்ட்’ முறையில் தூக்குப்பாலம் அமைக்கப்படுகிறது.
மதுரை,
ராமேசுவரம் தீவை ராமநாதபுரம் மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் கடந்த 1914-ம் ஆண்டு பாக்ஜலசந்தி கடலில் பாம்பன் ரெயில் பாலம் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் கட்டப்பட்டது. இந்த பாலம் 145 கர்டர்களுடன் 2.06 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடல் தண்ணீர் மற்றும் உப்பு காற்று ஆகியவற்றால் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த பாலம் சேதமடைந்து வருகிறது. அதனை தொடர்ந்து, புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு ரூ.279 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. இந்த புதிய பாலத்தை சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் இரு புறங்களையும் இணைக்கும் வகையில் 'லிப்ட்' தொழில்நுட்பத்தில் ஏறி இறங்கும் வகையில் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பாலம் இரட்டை அகலப்பாதை அமைக்கும் வகையில், அகலமான தூண்களுடன் கட்டப்படுகிறது. பாலம் வலிமையாக இருப்பதற்காக கடல் மண் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் தரத்திற்கேற்ப 1.5 மீட்டர் சுற்றளவு கொண்ட 333 குவியல் முறை தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தூண்கள் கடலுக்கு அடியில் 35 மீட்டர் ஆழம் வரை கட்டப்பட்டுள்ளன.
கப்பல்கள் வரும் போது இந்த பாலத்தை கடக்க வசதியாக பாலத்தின் இருபுறங்களையும் பிரித்து செங்குத்தாக நிறுத்தும் வகையில், 72.5 மீட்டர் உயரம் கொண்ட 'மெகா லிப்ட்' தயாராகி வருகிறது. இதனால், திறந்த வலைப்பின்னல் அமைப்பு கொண்ட கர்டர்கள், கப்பல்கள் வரும்போது பாலத்தை செங்குத்தாக மேலெழுந்து நிற்க செய்யும். இதன் மூலம், பாம்பன் சாலைப்பாலத்துக்கு இணையான உயரத்தில் அதாவது, மின்சாரம் மற்றும் எந்திரவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 17 மீட்டர் வரை தூக்குப்பாலத்தை மேலே தூக்க முடியும். இதனால் பெரிய கப்பல்களும் எளிதாக ரெயில் பாதையை கடக்க முடியும். இதே வடிவமைப்பில் 15 மீட்டர் உயர லிப்ட் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் மில்வாக்கி ஆற்றுப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலம் கட்டுமான பணிகளுக்காக ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி ரெயில் நிலைய வளாகத்தில் பிரமாண்ட தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சர்வதேச தரத்துடன் கூடிய பாலத்திற்கான கட்டுமான உபகரணங்கள் வடிவமைக்கப்பட்டு பாம்பன் கடல் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
புதிய பாலப்பணிகள் அடுத்த மாதம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூக்குப்பாலத்துக்கான பணிகள் முழுமையடைந்தவுடன் அடுத்த வருடம் முதல் ரெயில் போக்குவரத்துக்கு தயாராகி விடும் என கூறப்படுகிறது.