கார்த்திகை அகல் விளக்குகள்


கார்த்திகை அகல் விளக்குகள்
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:45 PM GMT)
தர்மபுரி

கார்த்திகை தீபத்திருநாள், இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. 8-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழக இல்லங்களில் எல்லாம் தீபங்கள் ஒளிரும்.

அகல் விளக்குகள்

மண்பானைகள், கலைநயமிக்க கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட அகல்விளக்குகள் குவிந்திருக்கின்றன. சாலை ஓரங்களிலும் அகல்விளக்கு கடைகள் முளைத்திருக்கின்றன.

விளக்குகள் 3 அங்குலம் முதல் 1 அடி உயரம் வரை விற்பனைக்கு வந்திருக்கின்றன. மண் குத்துவிளக்கு, தட்டு விளக்கு, சரவிளக்கு, 5 முக விநாயகர் விளக்கு, தேங்காய் வடிவ விளக்கு என்று ஒவ்வொரு விளக்கிற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

ரெடிமேடு விளக்குகள்

இவை ஒருபுறம் இருக்க தற்போது மெழுகு விளக்குகள், கிளே விளக்குகள், ரெடிமேட் நெய் விளக்குகள், பீங்கான் விளக்குகள் என பல்வேறு மாடல்களில் விளக்குகள் சந்தைக்கு வந்துள்ளன. இதனால் களிமண்ணால் செய்யப்படும் பாரம்பரிய அகல்விளக்குகள் அவைகளோடு போட்டியிட முடியாமல் மெல்ல மெல்ல அடையாளத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமையல் பாத்திரங்கள், அலங்காரப்பொருட்களில் உலோகங்களின் ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த தொழிலை நம்பி இருந்தவர்கள் கட்டுமானம் போன்ற இதர வேலைகளுக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் புதுவரவுகளான ரெடிமேடு விளக்குகளால் அகல்விளக்கு தயாரிப்பு தொழில் அதிகளவில் பாதிப்பைச் சந்தித்து வருவதாக தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

நியாயமான விலை கிடைக்கவில்லை

அதியமான்கோட்டையில் அகல்விளக்கு தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் லோகநாயகி:-

இந்த பகுதியில் 100 குடும்பங்கள் பொங்கல் பானை, சட்டி, அகல்விளக்கு உள்ளிட்ட பொருட்களை உள்ளடக்கிய மண்பாண்ட தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். உரிய வருமானம் கிடைக்காததால் இப்போது 40 குடும்பங்கள் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபடுகின்றன. மற்ற தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர். கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த விளக்குகள் தயாரிப்பதற்கான உற்பத்தி செலவு கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது 2 மடங்கு உயர்ந்து விட்டது.

ஆனால் கடந்த ஆண்டு 70 பைசாவுக்கு கொள்முதல் செய்யப்பட்ட ஒரு அகல் விளக்கு இப்போது 80 பைசாவுக்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இந்த விளக்கு வெளி மார்க்கெட்டில் ரூ.3 மற்றும் அதற்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. அகல் விளக்குகள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. ஒரு விளக்கிற்கு ரூ.1.50 கொள்முதல் விலை நிர்ணயம் செய்தால் எங்களுக்கு ஓரளவுக்கு வருமானம் கிடைக்கும். அரசு அகல் விளக்குகளை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓரளவிற்கு லாபம்

பாலக்கோட்டை சேர்ந்த அகல் விளக்கு வியாபாரி செல்வி:-

விருத்தாசலம் பகுதியில் இருந்து அகல் விளக்கு கொள்முதல் செய்கிறோம். பாலக்கோடு பகுதியில் சுமார் 50 ஆயிரம் விளக்குகள் விற்பனையாகின்றன. 10 ரூபாய்க்கு 5 அகல் விளக்குகள் என கொள்முதல் செய்து, வாடிக்கையாளர்களுக்கு 10 ரூபாய்க்கு 3 விளக்குகள் என விற்பனை செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் புதுவிளக்கு வாங்கி அதில் விளக்கு ஏற்ற வேண்டும் என ஐதீகம் உள்ளதால் வீட்டில் பழைய விளக்குகள் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் புது விளக்குகள் வாங்க வருகின்றனர். ஒரு சில நாட்களே இந்த அகல் விளக்கு வியாபாரம் நடக்கும். இந்த வியாபாரத்தில் ஓரளவிற்கு லாபம் கிடைக்கிறது.

தொழிலாளர்கள் பாதிப்பு

தர்மபுரியை சேர்ந்த புலவர் தியாகசீலன்:-

கார்த்திகை தீபத்தின்போது வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றிவிட்டு பின்னர் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றும் கலாசாரம் முன்பு இருந்தது. இப்போது இந்த பழக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. தூய்மையான களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் முன்பு அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. இதனால் இவற்றை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரம் கிடைத்து வந்தது.

இப்போது இதிலும் நவீனத்துவம் என்ற பெயரில் எந்திர கட்டிங் விளக்குகள் வந்துவிட்டன. களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை பயன்படுத்துவது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் இந்த தொழிலை பாரம்பரியமாக செய்து வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு களிமண் விளக்குகளை அதிகளவில் பயன்படுத்த வேண்டும்.

விலைவாசி உயர்வு

தர்மபுரி குமாரசாமி பேட்டையைச் சேர்ந்த பக்தர் செல்லதுரை:-

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகை தீபத்தின் போது வீடுகள் மற்றும் தெருக்கள் முழுவதும் அகல் விளக்குகள் ஏற்றப்படும். இப்போது விளக்குகளுக்கு பயன்படுத்தும் எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அதிகளவில் விளக்குகளை ஏற்றுவது குறைந்துவிட்டது. இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கார்த்திகை தீபத்தின் போது எல்.இ.டி. விளக்குகள் கூட வைக்கப்படுகின்றன. திருவிழாக்கள் மற்றும் இறை வழிபாட்டில் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாறிவரும் வாழ்க்கை முறை

தர்மபுரியை சேர்ந்த குடும்பத்தலைவி சண்முகப்பிரியா:-

கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளின்வாசலில் விளக்கேற்றும் பழக்கம் முன்பு இருந்தது. இப்போது இந்த பழக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதேபோல் கோவில்களுக்கு சென்று அங்கு விளக்கேற்றும் பழக்கமும் குறைந்துவிட்டது. மாறிவரும் வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இருந்த போதிலும் இத்தகைய பாரம்பரிய வழிபாடுகளை இப்போதும் பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நேர்மறையான அதிர்வலைகளை நம்மிடம் ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story