மார்கழி மாத பிறப்பையொட்டி கோவில்களில் திருவிளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு
மார்கழி மாத பிறப்பையொட்டி கோவில்களில் திருவிளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு செய்தனர்.
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் மகத்துவம் நிறைந்தது ஆகும். வீட்டில் ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி வழிபாடு செய்வதும், திருப்பாவை, திருவெம்பாவை பாடுவதும், கேட்பதும் புண்ணியம் ஆகும். மேலும் இந்த மாதம் முழுவதும் கோவிலுக்கு சென்று வந்தால் வருடம் முழுவதும் கோவிலுக்கு சென்று வந்த பலன் கிட்டும் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு பெற்ற மார்கழி மாதம் முழுவதும் கோவில்களில் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, மார்கழி மாத பிறப்பையொட்டி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று திருவிளக்கு வழிபாடு தொடங்கியது. இதையொட்டி காலை 5.30 மணி அளவில் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்பட்டு திருவிளக்கு பூஜை தொடங்கியது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். அதன்பிறகு தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் காலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. பின்னர் ஞானாம்பிகை-காளகத்தீசுவர், அபிராமி-பத்மகிரீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மேலும் திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், மலையடிவாரம் பத்ரகாளி அம்மன் கோவில், சீனிவாச பெருமாள் கோவில், ரவுண்டு ரோடு விநாயகர் கோவில், ஓய்.எம்.ஆர்.பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில், என்.ஜி.ஓ. காலனி முருகன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து கோவில்களிலும் திருவிளக்கு பூஜை தொடங்கியது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.