திருவேங்கடம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி மனைவி கண்முன்னே பரிதாபம்


திருவேங்கடம் அருகே  மின்னல் தாக்கி விவசாயி பலி  மனைவி கண்முன்னே பரிதாபம்
x

திருவேங்கடம் அருகே மின்னல் தாக்கி விவசாயி இறந்தார். மனைவி கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது

தென்காசி

திருவேங்கடம்:

திருவேங்கடம் அருகே மின்னல் தாக்கி விவசாயி இறந்தார். மனைவி கண்முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

விவசாயி

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி எடுத்தது. மாலை 4 மணியளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்தநிலையில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பலியானார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

திருவேங்கடம் அடுத்துள்ள சங்குபட்டி மேலத்தெருவைச் சேர்ந்தவர் சங்கையா மகன் துரைசாமி (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி ராசாத்தி. துரைசாமி தனது தோட்டத்தில் பருத்தி பயிரிட்டு இருந்தார். அது விளைந்து இருந்ததால் அதனை எடுத்துக் கொண்டு சைக்கிளில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் ராசாத்தி நடந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

மின்னல் தாக்கி பலி

அப்போது திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்தது. துரைசாமி திரும்பி பார்த்தபோது மனைவியை காணவில்லை. எனவே சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியை தேடி வந்து கொண்டிருந்தார். ஊருக்கு கிழக்கே உள்ள மின்கோபுரம் அருகே மனைவியை தேடி வந்தார்.

மனைவி அருகில் சென்றபோது திடீரென துரைசாமி மீது மின்னல் தாக்கியது. இதில் துரைசாமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

கணவன் தன் கண்முன்னே மின்னல் தாக்கி பலியானதை கண்டு மனைவி ராசாத்தி அலறி துடித்தார். உறவினர்களும் அங்கு திரண்டு வந்து துரைசாமி உடலை பார்த்து கதறி அழுதனர்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்னல் தாக்கி உயிரிழந்த துரைசாமி உடலை போலீசார் கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்துபோன துரைசாமிக்கு கணேசமூர்த்தி, மதன்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.



Next Story