கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தும் சிங்கவால் குரங்குகள்
வால்பாறை நகரில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை சிங்கவால் குரங்குகள் சேதப்படுத்தி வருகின்றன.
வால்பாறை,
வால்பாறை நகரில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை சிங்கவால் குரங்குகள் சேதப்படுத்தி வருகின்றன.
கண்காணிப்பு கேமராக்கள்
வால்பாறை நகர் பகுதியில் போலீசார், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் சார்பில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. போலீசாரின் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் போலீஸ் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையோடு இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி பார்க்க முடியும். இதேபோல் பிற கேமராக்களும், ஆங்காங்கே டி.வி.க்களோடு இணைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே வால்பாறை நகரில் சிங்கவால் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. நாளுக்கு நாள் அதன் தொல்லையும் அதிகரித்து வருகின்றன. அவை முக்கிய இடங்கள், வணிக நிறுவனங்கள் முன்பு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களையும், அதன் கேபிள்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் சில கேமராக்கள் செயல்படாமல் உள்ளது.இதன் காரணமாக திருட்டு சம்பவங்கள் நடைபெறும் போது, கண்காணிப்பு கேமராக்களில் காட்சிகள் பதிவாகாமல் உள்ளதால் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
போலீசார் அறிவுரை
இதுகுறித்து வால்பாறை போலீசார், வால்பாறை நகரில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கி உள்ளனர். மேலும் ஒவ்வொரு வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை தினமும் கவனிக்க வேண்டும். நகர் பகுதியில் நுழையும் சிங்கவால் குரங்குகள் கண்காணிப்பு கேமராக்களையும், அதன் கேபிள்களையும் சேதப்படுத்தி வருகின்றன.
எனவே, காண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். அதில் சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் ஏதாவது இருந்தால், உடனடியாக அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல் தங்கும் விடுதி, காட்டேஜ் போன்ற இடங்களில் பொருத்தி உள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.