டாஸ்மாக் கடையில் ரூ.4½ லட்சம் மது பாட்டில்கள் கொள்ளை


டாஸ்மாக் கடையில் ரூ.4½ லட்சம் மது பாட்டில்கள் கொள்ளை
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-31T00:16:55+05:30)

இரணியல் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து ரூ.4½ லட்சம் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து ரூ.4½ லட்சம் மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

டாஸ்மாக் கடை

இரணியல் அருகே உள்ள ஆழ்வார்கோவில் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக மைக்கேல் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்பு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர்.

நேற்று காலையில் கடையின் ஷட்டர் திறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் மேற்பார்வையாளர் மைக்கேலுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் கடைக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சில மதுபாட்டில்கள் இருந்த பெட்டிகள் வெளியே வைக்கப்பட்டு இருந்தன. மேலும் கடையில் இருந்த மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இதுபற்றி மைக்கேல் இரணியல் போலீசாருக்கும், டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதலில் கொள்ளை போன மது பாட்டில்களின் எண்ணிக்கை தெரியாமல் இருந்தது.

ரூ.4½ லட்சம்...

தொடர்ந்து உயர் அதிகாரிகள் கடைக்கு வந்து மதுபாட்டில்களை ஆய்வு செய்தனர். அப்போது 2,074 மதுபாட்டில்கள் கொண்ட 46 பெட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.4½ லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ெதாடர்ந்து நடந்த விசாரணையில், இரவில் கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கடையில் இருந்த மதுபாட்டில் பெட்டிகளை வெளியே கொண்டு வந்துள்ளனர். பின்னர் அவற்றை வாகனங்களில் கொண்டு செல்ல முடிவு செய்து முதலில் 46 பெட்டிகளை எடுத்துச் சென்றுள்ளனர். அதற்குள் ஆட்கள் வந்ததால் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனால், பல லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் தப்பின. கொள்ளையர்கள் கொண்டு செல்வதற்காக வெளியே எடுத்து வைத்த மதுபாட்டில்கள் இருந்த பெட்டிகள் அப்படியே இருந்தது தெரியவந்தது.

இதற்கிடையே போலீசார் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய முயன்றனர். அப்போது கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் உபகரணத்ைதயும் கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரிய வந்தது.

பரபரப்பு

இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story