சிங்கம்புணரியில் மது பிரியர்கள் அட்டகாசம்: பாராக மாறி வரும் கால்நடை ஆஸ்பத்திரி
சிங்கம்புணரியில் மது பிரியர்களின் அட்டகாசத்தால் கால்நடை ஆஸ்பத்திரி பாராக மாறி வருகிறது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் மது பிரியர்களின் அட்டகாசத்தால் கால்நடை ஆஸ்பத்திரி பாராக மாறி வருகிறது.
பாராக மாறும் ஆஸ்பத்திரி
சிங்கம்புணரி தனி வட்டமாக பிரிக்கப்பட்டு சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்களை இணைத்து சிங்கம்புணரி தனி தாலுகா அந்தஸ்து பெற்று செயல்பட்டு வருகிறது. விவசாயம் நிறைந்த பகுதியான சிங்கம்புணரியில் கால்நடைகளுக்கு என தனி ஆஸ்பத்திரி 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்்த கால்நடை ஆஸ்பத்திரி திண்டுக்கல் சாலை கிருங்காக்கோட்டை விலக்கு அருகே உள்ளது. ஆரம்ப காலத்தில் ஓட்டு கொட்டகையில் செயல்பட்டு வந்த கால்நடை ஆஸ்பத்திரி கடந்த ஆண்டு ரூ.34 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
இந்நிலையில் இந்த புதிய ஆஸ்பத்திரி கட்டிட வளாக பகுதிகளிலும்,பழைய ஓட்டு கட்டிட வளாக பகுதிகளிலும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் மது பிரியர்கள் வந்து மது குடிக்கின்றனர். இதனால் கால்நடை ஆஸ்பத்திரி மது பிரியர்களின் பாராக மாறி வருகிறது.
கோரிக்கை
இவ்வாறு வரும் மது பிரியர்கள் மது குடித்து விட்டு காலி மது பாட்டில்களை ஆங்காங்கே உடைத்து செல்கின்றனர். இதனால் உடைந்த காலி பாட்டில்கள் கால் நடைகள் மற்றும் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களின் கால்களில் குத்தி காயம் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் ஆங்காங்கே திண்பண்டங்களும், காலி பிளாஸ்டிக் கவர்களும் கிடப்பது காலையில் ஆஸ்பத்திரிக்கு வரும் பணியாளர்களை முகம் சுழிக்க வைக்கிறது.
எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.