கோவில்கள், பள்ளிகளில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
விஜயதசமியையொட்டி கோவில்கள், பள்ளிகளில் நடைபெற்ற எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் குழந்தைகள் பலர் எழுத கற்றுக்கொண்டனர்.
விஜயதசமியையொட்டி கோவில்கள், பள்ளிகளில் நடைபெற்ற எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் குழந்தைகள் பலர் எழுத கற்றுக்கொண்டனர்.
ஆயுதபூஜை
நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கடந்த 9 நாட்களாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல ஊர்களில் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து மக்கள் வழிபட்டனர். 9-ம் நாளான நேற்று முன்தினம் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
ஏராளமானோர் தங்களின் வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும், சரஸ்வதி படங்களை வைத்து தேங்காய், பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை படையலிட்டு வழிபட்டனர். மேலும், கல்வி மற்றும் தொழிலுக்கு உதவும் புத்தகங்கள், கருவிகள், எந்திரங்கள், வாகனங்கள் ஆகியவற்றுக்கும் சந்தனம், குங்குமமிட்டு ஆயுத பூஜையை உற்சாகமாக கொண்டாடினர்.
எழுத்தறிவித்தல்
நவராத்திரியின் 10-வது நாளான நேற்று விஜயதசமி கொண்டாடப்பட்டது. விஜயதசமி நன்னாளில் கல்வி, கலைகள், தொழில்கள் என எது தொடங்கினாலும் வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கை. குறிப்பாக கல்விக்கு உகந்த நாளான நேற்று கல்வியை தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம். இதையொட்டி குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி கோவில்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இதில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்துச்சென்று, அவர்களின் கையைப்பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் `ஓம்', `அ' என்று எழுத கற்றுக்கொடுத்து எழுத்தறிவை தொடங்கினர். தனியார் பள்ளிகள் போல், அரசு பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தவும், 9-ம் வகுப்பு வரை புதிய மாணவர்களை சேர்க்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி அரசு தொடக்கப்பள்ளிகள் பலவற்றில் விஜயதசமியையொட்டி மாணவர்கள் சேர்க்கை நேற்று நடைபெற்றது.
உத்தமர்கோவில்
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஞான சரஸ்வதி சிறப்பு அலங்காரத்தில் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து பள்ளிக்கல்வியை தொடங்க இருக்கும் குழந்தைகள் ஞான சரஸ்வதிதேவிக்கு முன்பு அமர்ந்து நெல்லில் தமிழ் முதல் எழுத்தான 'அ' எழுதி கையெழுத்து பழகினர். இதில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்துகொண்டு வழிபட்டனர்.
கல்லக்குடி
புள்ளம்பாடி ஒன்றியம் பு.சங்கேந்தி ஊராட்சி அய்யனார்புரம் கிராமத்தில் உள்ள ஹரிஹரபுத்திரகருப்பண்ணாசுவாமி கோவிலில் விஜயதசமி விழா நடந்தது. சங்கேந்தி ஆண்டவர் அறக்கட்டளை சார்பில் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் 100 பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.