ஊட்டியில் இலக்கிய திருவிழா
ஊட்டியில் இலக்கிய திருவிழா நடந்தது. இதில் பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த நூலகத்தில் 7-வது இலக்கிய திருவிழா நேற்று தொடங்கியது. இதில் பிரபல எழுத்தாளர்களான பெருமாள் முருகன், சுதா மூர்த்தி, ஜெர்ரி பின்டோ, கல்கி கோச்லின், டாக்டர் மகேஷ் ரங்கராஜன், மன்சூர் கான், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். இதேபோல் பிரபல கார்ட்டூனிஸ்ட் பால் பெர்னாண்டசின் ஊட்டியின் உணர்வை வெளிப்படுத்தும் தனித்துவமான பழைய சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன். பின்னர் ஆடல், பாடல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் மாணவர்கள், இளைஞர்களை ஈர்க்கும் வகையில், பிரபல எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஊட்டியின் இலக்கியம், கலாசாரம், வரலாறு, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து பேசப்பட்டது. விழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசும்போது, எனது குடும்பத்தில் யாருக்கும் எழுத படிக்க தெரியாது. எழுத்தறிவு எனது தலைமுறையில் தான் வந்தது. அதற்கு அப்போது முதல்-அமைச்சராக இருந்த காமராஜருக்குதான் நன்றி கூற வேண்டும். 1990-களில் எழுத்தாளர்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்தது என்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அதிகளவு இலக்கிய திருவிழாக்களை நடத்த வேண்டும். எழுத்தாளர்கள் கல்புர்கி, கவுரி லங்கேஸ் கொல்லப்பட்டு உள்ளனர். இந்தியா முழுவதும் எழுத்து சுதந்திரம் கேள்விக்குறியாக உள்ளது. பேச்சாளர்களை போல் எழுத்தாளர்களுக்கும் சுதந்திரம் கிடைக்க வேண்டும். தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழா நடத்துவது சிறப்பானது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் ராமன், நீலகிரி நூலக தலைவர் கீதா சீனிவாசன் உள்பட பலர் செய்திருந்தனர்.