அரசு பள்ளிகளில் இலக்கிய மன்ற போட்டிகள்
அரசு பள்ளிகளில் இலக்கிய மன்ற போட்டிகள் நடந்தது. இதனை முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்றிய அளவிலான பேச்சு, கட்டுரை உள்ளிட்ட இலக்கிய மன்ற போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று அனைத்து ஒன்றியங்களிலும் இலக்கிய மன்றபோட்டி மற்றும் வினாடி, வினா நடத்தப்பட்டது.
இதேபோல் அனைத்து ஒன்றியங்களிலும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் என்ற தலைப்பில், 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் முதல் 2 இடத்தை பிடித்த மாணவர்கள், அடுத்து நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பரிந்துரை செய்யப்பட்டனர்.
கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிகளை வேலூர் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, பள்ளி துணை ஆய்வாளர்கள், வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் கோபிநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.