இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு தலைவர்கள் இரங்கல்; நாளை பிற்பகல் இறுதிச்சடங்கு


இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவு தலைவர்கள் இரங்கல்; நாளை பிற்பகல் இறுதிச்சடங்கு
x
தினத்தந்தி 18 Aug 2022 10:38 AM GMT (Updated: 18 Aug 2022 11:40 AM GMT)

உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த நெல்லை கண்ணன் இன்று காலமானார் அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

சென்னை

தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக காலமானார்.

அவருக்கு வயது 78. ந.சு. சுப்பையா பிள்ளை, இலக்குமி அம்மையார் ஆகியோரின் 4வது மகனாக கடந்த 1946 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நெல்லை கண்ணன்.

விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தமிழ் மீது தனியாத ஆர்வம் கொண்டவராக இருந்து வந்த அவர், பாரதி பாடல்கள், தமிழ் இலக்கிய நூல்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர். பேச்சாற்றல் மிக்கவர் என்பதால் ஏராளமான பட்டிமன்றங்களில் கலந்து கொண்டவர். அரசு தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராகப் பலமுறை செயல்பட்டுள்ளார்.

அவரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்

பிரபல பேச்சாளரும், முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் மறைவு வருத்தமளிக்கிறது

விசிக விருது விழாவில் என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டி பேசியதை நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன்.நெல்லை கண்ணனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என கூறி உள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்

தமிழையும் தேசியத்தையும் இரு கண்களாகப் போற்றி வாழ்நாள் முழுதும் ஓய்வில்லாமல் உழைத்துப் பல்லாயிரம் ரசிகர்களைப் பெற்ற நண்பர் நெல்லைக் கண்ணன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கும் சமயச் சொற்பொழிவுத் துறைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு

அவருடைய ஆன்மா அமைதி பெறுவதாக என கூறி உள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்: "தமிழறிஞரும் தலைசிறந்த சொற்பொழிவாளருமான திரு.நெல்லை கண்ணன் காலமானார் என்ற செய்தியறிந்து

வருத்த மடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் என்றைக்கும் நிலைத்து நிற்கும்." என்று கூறியுள்ளார்.

மதிமுக பொதுசேயலாளர் வைகோ எம்.பி,வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்

தமிழுக்கு புகழ் நெல்லை கண்ணன் எனவும், சமய நிகழ்ச்சியாக இருந்தாலும் பட்டிமன்றமாக இருந்தாலும் நெல்லை கண்ணன் தான் சிறப்பாக இருப்பார். அவரது இறப்பு என்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமயம், இலக்கியம், பட்டிமன்றம் எதுவாக இருந்தாலும் அவர் ஆற்றல் மிக்கவராக இருப்பார் எனக் கூறிய அவர், இந்த இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் பெரிய இழப்பாக உள்ளது. என கூறினார்

அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

"தமிழறிஞர்

நெல்லை கண்ணன் மறைவு

நெடுந்துயரம் தருகிறது

சங்க இலக்கியம் சாற்றியவர்

கம்பரைக் காட்டியவர்

பாரதியைப் போற்றியவர்

பாவேந்தரை ஏற்றியவர்

கண்ணதாசனை நாட்டியவர்

மறைந்துற்றார்

யார் அவர்போல்

பேசவல்லார்?

அவர்போன்ற

எள்ளல்மொழி வள்ளல்

இனி எவருளார்?

ஏங்குகிறேன்;

இரங்குகிறேன்" எனத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்

தமிழகம் அறிந்த திரு. நெல்லை கண்ணன் அவர்களது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலக்கிய பட்டிமன்ற நடுவராக பொறுப்பேற்று கூறிய கருத்துகள் மிக ஆழமானவை, சிந்திக்கக் கூடியவை. மிகுந்த நகைச்சுவையோடு பேசக் கூடியவர். காங்கிரஸ் பேரியக்கத்தில் இளமைப் பருவம் முதல் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி பல பொறுப்புகளை வகித்தவர்.

"இளமை பருவம் முதல் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி, பல பொறுப்புகளை வகித்த நெல்லை கண்ணின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்"

"தமிழறிஞரும், மிகச் சிறந்த சொற்பொழிவாளருமான நெல்லை கண்ணன் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்" என கூறி உள்ளார்.

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் சிறந்த தமிழ் அறிஞரும், சமூகப் பார்வையுடன் கூடிய முற்போக்குச் சிந் தனையாளரும், சிறந்த இலக்கியப் பேச்சாளரும், துணிவுடன் எந்த மேடையிலும் பேசும் ஆற்றலாளருமான நண்பர் நெல்லை கண்ணன் (வயது 78) வயது முதிர்வு காரணமாக நெல்லையில் இன்று (18.8.2022) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த நெல்லை கண்ணன் இன்று காலமானார்.தமிழ்நாடு ஒரு சிறந்த இலக்கியத் திறனாய்வாளரை இழந்தது. அவரது இடத்தை எவரும் எளிதில் நிரப்ப இயலாது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.


Next Story