மாசி சப்பாணி கருப்பண்ணசுவாமி கோவிலில் குட்டி குடித்தல் விழா
மாசி சப்பாணி கருப்பண்ணசுவாமி கோவிலில் குட்டி குடித்தல் விழா நடந்தது.
திருச்சி, கண்டோன்மெண்ட் கான்வென்ட் சாலையில் ராஜகணபதி, முன்னுடையான், மாசி சப்பாணி கருப்பண்ணசுவாமி, முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 46-ம் ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருத்தேர் வீதி உலா கடந்த 21-ந் தேதி நள்ளிரவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் மாவிளக்கு பூஜையும், இரவில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் விழா நேற்று காலை ஒத்தக்கடை மந்தையில் நடந்தது.இதனையொட்டி மருளாளி ஜெயராஜ் அடிகளார் கோர்ட்டு அருகே உய்யகொண்டான் வாய்க்கால் பகுதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். பின்னர் மருளாளி ஏராளமான ஆட்டுக்குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) அன்னதானமும், நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா மற்றும் காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறையில் பூவிடும் விழாவும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு விடையாற்றி பூஜையுடன் விழா முடிவடைகிறது.