குரங்குகள் கடித்து சிறுமி படுகாயம்


குரங்குகள் கடித்து சிறுமி படுகாயம்
x

சிங்கம்புணரி அருகே குரங்குகள் கடித்ததில் சிறுமி படுகாயம் அடைந்தாள்.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே குரங்குகள் கடித்ததில் சிறுமி படுகாயம் அடைந்தாள்.

குரங்குகள்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி, பிரான்மலை, முட்டக்கட்டி, சிங்கம்புணரிநகர் பகுதிகளில் அதிகமான குரங்குகள் உள்ளன. இந்த பகுதிகளில் நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வீடுகளுக்கு சென்று உணவு மற்றும் பொருட்களை எடுத்து சென்று அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று மாலை பிரான்மலை அருகே முட்டக்கட்டி கிராமத்தில் முத்துக்குமார் என்பவரின் 4 வயது மகள் கீர்த்தனா வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்த சிறுமியை அப்பகுதியில் உலா வந்த குரங்குகள் திடீரென கடித்தன. இதனால் அந்த சிறுமி அலறினாள்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதையடுத்து குரங்குகள் அங்கிருந்து ஓடி விட்டன. குரங்குகள் கடித்ததில் சிறுமி படுகாயம் அடைந்தாள்.

இதையடுத்து உடனடியாக சிறுமியை அருகில் உள்ள பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு சிறுமிக்கு தடுப்பூசி போடப்பட்டு முதலுதவி செய்யப்பட்டது.

கோரிக்கை

சிங்கம்புணரி மற்றும் பிரான்மலை வட்டார பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் மக்கள் தவித்து வருகின்றனர். வீடுகளில் நுழைந்து பொருட்களை நாசம் செய்கின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் உடனடியாக குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story