கால்நடைகள் கணக்கெடுப்பு பணி


கால்நடைகள் கணக்கெடுப்பு பணி
x
தினத்தந்தி 21 Sep 2023 7:48 PM GMT (Updated: 21 Sep 2023 7:49 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் நவநீதகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதை கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் நவநீதகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

கால்நடைகள் கணக்கெடுப்பு பணி

தமிழகத்தில் ஆண்டு தோறும் கோடை கால கணக்கெடுப்பு பணி, மழைக்கால கணக்கெடுப்பு பணி, குளிர்க்கால கணக்கெடுப்பு பணி என ஆண்டுக்கு 3 முறை கால்நடைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு 2023-24-ம் ஆண்டுக்கான மழைக்கால மாதிரி வரைவு திட்ட கால்நடை கணக்கெடுப்பு பணி கடந்த ஜூலை மாதம் தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) வரை நடை பெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் இந்த பணி நடைபெற்று வருகிறது.

ஆய்வு

இந்த பணியினை கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குனர் (சிறப்பு திட்டங்கள்) டாக்டர் நவநீதகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பருதியப்பர்கோவில் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து நடுவூர், ஈச்சங்கோட்டையில் உள்ள கால்நடை பண்ணைகளையும் பார்வையிட்டு அய்வு செய்தார். தஞ்சை, அம்மன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கால்நடை பன்முக ஆஸ்பத்திரி, கால்நடை மருந்தகங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

தொழில் நுட்ப கூட்டம்

மேலும் தஞ்சையில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலக புதிய கட்டிடம் கட்டும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து நடந்த தொழில்நுட்ப கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டு, கால்நடை டாக்டர்கள், உதவி டாக்டர்க்ள், ஆய்வாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கினார். மேலும் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படும் ஆம்புலன்சு சேவை குறித்து ஆய்வு செய்து சிறப்பாக செயல்படுத்த அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது மண்டல இணை இயக்குனர் டாக்டர் தமிழ்ச்செல்வன், துணை இயக்குனர்கள் சுப்பையன், பாஸ்கர், ரமேஷ், உதவி இயக்குனர்கள் கண்ணன், அன்புச்செழியன் மற்றும் கால்நடை டாக்டர்கள், ஆய்வாளர்கள், கணக்கெடுப்பாளர்கள் உடன் இருந்தனர்.


Next Story