எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
குமரி மாவட்டத்தில் எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களை பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களை பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
1,016 பள்ளிகள் திறப்பு
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பிறகு இம்மாதம் 13-ந் தேதி (அதாவது நேற்று) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மாவட்டத்தில் எல்.கே.ஜி. முதல் 10-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி என 1,016 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
இனிப்பு வழங்கி வரவேற்பு
அனைத்து பள்ளிகளிலும் நேற்று மாணவ- மாணவிகளை அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் அழைத்து சென்றனர். சிலர் ஆட்டோக்கள் மற்றும் பள்ளி வாகனங்களில் அனுப்பி வைத்தனர். இதனால், நேற்று நாகர்கோவில் நகரின் அனைத்து சாலைகளிலும் வாகன நெருக்கடி அதிகமாக இருந்தது.
அதிலும் பள்ளிகள் அமைந்திருந்த பகுதிகள் அனைத்திலும் நேற்று மாணவ- மாணவிகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பதற்காக வந்திருந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் கூட்டம் அளவுக்கதிகமாக இருந்தது. மாவட்டம் முழுவதும் இதேபோன்ற நிலைதான் காணப்பட்டது.
பல பள்ளிகளில் ஆசிரிய- ஆசிரியைகள் பூக்கள் கொடுத்தும், சாக்லேட் உள்ளிட்ட இனிப்புகள் கொடுத்தும் மாணவ- மாணவிகளை இன்முகத்தோடு வரவேற்றனர்.
அழுது புரண்ட மாணவர்கள்
எல்.கே.ஜி., யூ.கே.ஜி. மற்றும் முதல் வகுப்புகளில் புதிதாக மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட்டு இருந்தனர். புதிதாக பள்ளிக்கு வந்திருந்த எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் சிலர் சந்தோஷமாக பெற்றோரிடம் டாடா காட்டிவிட்டு வகுப்பறைகளுக்குள் சென்றனர். பல மாணவ- மாணவிகள் பெற்றோரை பிரிய மனமில்லாமல் அழுது புரண்டனர். கதறி அழுத அந்த குழந்தைகளை அந்தந்த பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள் இனிப்பு கொடுத்தும், விளையாட்டு சாதனங்களை காண்பித்தும் சமாதானப்படுத்தி வகுப்பறைகளுக்குள் அழைத்துச் சென்றனர். இதனால் பல பள்ளிகள் நேற்று காலையில் மிகுந்த பரபரப்புடன் காட்சி அளித்தது.
பாடப்புத்தகங்கள் வினியோகம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் நாளான நேற்று நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டன. மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பே வழங்கப்பட்டு இருந்தன. சில மெட்ரிக் பள்ளிகள் முதல் நாளான நேற்று மதியம் வரை மட்டுமே செயல்பட்டன. மற்ற பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்பு மாணவர்களுக்கு மதியம் வரையும், மற்ற மாணவர்களுக்கு மாலை வரையும் வகுப்புகள் நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் வழக்கம்போல் முழு நேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான நேற்று மாவட்டம் முழுவதும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.