லோடு ஆட்டோ கவிழ்ந்து கல்லூரி மாணவர் பலி
பாவூர்சத்திரத்தில் லோடு ஆட்டோ கவிழ்ந்து பாலிடெக்னிக் மாணவர் பரிதாபமாக பலியானார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் லோடு ஆட்டோ கவிழ்ந்து பாலிடெக்னிக் மாணவர் பரிதாபமாக பலியானார்.
பாலிடெக்னிக் மாணவர்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டியை சேர்ந்தவர் குருசந்திரன் மகன் செல்வமுத்துக்குமரன் (வயது 19). இவர் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு டிப்ளமோ இ.சி.இ. படித்து வந்தார்.
இவர் விடுமுறை நாட்களில் கூலி வேலைகளுக்கு செல்வது வழக்கம். தற்போது செல்வமுத்துக்குமரன் கடைசி செமஸ்டர் தேர்வு எழுதி முடித்துள்ளார். இதனால் விடுமுறையில் இருந்து வந்தார்.
விபத்தில் சாவு
இந்த நிலையில் செல்வமுத்துக்குமரன் பாவூர்சத்திரம் எம்.கே.வி.கே.ஜி. சாலையில் பகுதியில் வீடு கட்டும் பணிக்கு இரும்பு கம்பி மற்றும் இரும்பு தகரங்களை லோடு ஆட்டோ ஒன்றில் ஏற்றிக் கொண்டு வேலைக்கு சென்றார்.
லோடு ஆட்டோவை கரிசலூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராமர் களஞ்சியம் என்பவர் ஓட்டிச் சென்றார். பின்னர் செல்வமுத்துக்குமரன் அமர்ந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த ரோட்டில் லோடு ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லோடு ஆட்டோவில் ஏற்றி வந்த கம்பி செல்வமுத்துக்குமரன் மீது விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதில் செல்வமுத்துக்குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து உடனடியாக பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, செல்வமுத்துக்குமரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.