சுமை தூக்கும் தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தம்


சுமை தூக்கும் தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தம்
x

சுமை தூக்கும் தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தம்

ஈரோடு

ஈரோட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்தம்

ஈரோடு பார்க் ரோடு, மூலப்பட்டறை, குப்பைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சரக்கு லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன், ரெகுலர் லாரி சர்வீஸ் என 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அங்கு சுமார் 7 ஆயிரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொருட்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி, இறக்கும் வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கூலி உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 13-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தினமும் தர்ணா போராட்டமும் நடத்தி வருகின்றனர். அதன்படி 3-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது.

தர்ணா

ஈரோடு பார்க் ரோட்டில் நேற்று காலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தமிழக பொது தொழிலாளர் சங்க தலைவர் பெரியார்நகர் மனோகரன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்க பொதுச்செயலாளர் கே.எஸ்.தென்னரசு, ஈரோடு மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க தலைவர் தங்கவேல், ஈரோடு மாவட்ட பொது தொழிலாளர் மத்திய சங்க பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்க தலைவர் விஜயகுமார், பாட்டாளி தொழிற்சங்க கவுரவ தலைவர் எஸ்.ஆர்.ராஜூ, ஈரோடு மாவட்ட அமைப்புசாரா முன்னேற்ற தொழிலாளர் சங்க கவுன்சில் செயலாளர் கோபால் உள்பட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ரூ.300 கோடி

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

ஈரோட்டில் கடந்த 6 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே கூலி உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி கூலி உயர்வு தொடர்பாக தீர்வு காணப்பட வேண்டும். இந்த கோரிக்கையை முக்கியமாக வைத்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் ஈரோட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளது.

குறிப்பாக மராட்டியம், ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மஞ்சள், ஜவுளி, எண்ணெய் வகைகள், மாட்டு தீவனம், கொப்பரை தேங்காய், மிளகு உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்படாமல் உள்ளது. சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துவிட்டன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த போராட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. இதனால் பெரும்பாலான குடோன்களில் பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளன.


Next Story