பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்


பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 6 Jun 2023 6:45 PM GMT (Updated: 7 Jun 2023 10:34 AM GMT)

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை

சிவகங்கை

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்.

கடனுதவி

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினரை சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக்கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக்கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடு கடன் ஆகிய கடன் திட்டங்களுக்கு கடனுதவி வழங்கி வருகிறது.

இதில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

வட்டி விகிதம்

பொதுகால கடன்திட்டம், தனிநபா்கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை ஆகும். பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம். நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம்.

நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம்.

விண்ணப்பிக்கலாம்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000 வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெறலாம்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம், பிறப்பிட சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story